Tuesday, August 30, 2016

Hajj Health Tips in Tamil Language

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!



உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!

ஹஜ்ஜின்போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் “உடல்நலம்” குறித்ததாகும். ஏனெனில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம்!

பொதுவாகவே வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் “ஹஜ்” செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.



இதனைத் தவிர்த்து “ஆரோக்கியமான ஹஜ்” ஜினை மேற்கொள்ள இதோ சில முக்கியமான வழிகாட்டுதல்கள்:

1. ஹஜ் பயணத்திற்கு முன் நடைப்பயிற்சி அவசியம்! எப்போது ஹஜ்ஜிற்காக “விண்ணப்பிக்கிறார்களோ” அந்நாள் முதல் ஹாஜிகள் செய்யவேண்டிய முதன்மையான பணி என்னவெனில், நடைப்பயிற்சிதான். நாள்தோறும் குறைந்தது 5 முதல் 7 கி.மீ வரை நடப்பது சாலச் சிறந்தது. அதுவும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே இப்பயிற்சியைத் தொடங்கவேண்டும்.

ஏனெனில், ஹஜ்ஜின்போது அதிகம் நடக்கவேண்டும். மினாவில் ஷைத்தான் மீது கல்லெறியக் கூடாரத்திலிருந்து வெகுதூரம் நடக்கவேண்டி வரும். அதே போல் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை ஹாஜிகள் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். (இதன் தொலைவு 8 கி.மீ) எல்லாவற்றிற்கும் மேலாக ஹரம் ஷரீஃபில் அன்றாட தவாஃப் செய்ய எண்ணும் ஹாஜிகளுக்கு நடைப்பயிற்சி மிக மிக முக்கியம். கூட்ட மிகுதியான நாட்களில் ஒரு தவாஃப் முடிய நடக்கும் தூரம் பல கி.மீ வரை நீளும். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் ஹாஜிகள் மிகவும் கஷ்டப்படுவது “நடக்கும்” விஷயத்தில்தான்! காரணம், முதுமையான வயதில் ஹஜ்ஜை மேற்கொள்வது. அதிக வசதி வாய்ப்பு உள்ள முஸ்லிம்கள் நடப்பதே இல்லை என்றே கூறலாம். எனவே நடைப்பயிற்சி மிக மிக முக்கியம்.

2. ஹாஜிகளே! உங்களுடைய கால்களை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் ஹஜ்ஜின்போது கால்களுக்குத்தான் அதிக வேலை இருக்கும். எனவே காலில் எந்தவிதமான காயமோ புண்ணோ ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக புதிதாக செருப்பு வாங்கி அணியாதீர்கள். இப்போது நீங்கள் பயன்படுத்தும் சாதாரணமாக காலணிகளில் இரண்டு ஜோடியினை நீங்கள் ஹஜ்ஜின்போது பயன்படுத்துங்கள். புதுச் செருப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால் நீங்கள் நடப்பதில் சிக்கல் ஏற்படும்.

3. ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இன்னோரு உண்மை, மக்கா மாநகரம் கடல் மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரத்திலிருக்கும் ஒரு பகுதி ஆகும். எனவே அங்கு காற்றழுத்தம் (ஆக்சிஜன்) குறைவாகும். எனவே நீண்ட தொலைவு நடப்பது என்பது நம்மூரில் நடப்பது போன்று எளிதன்று! ஹஜ்ஜில் “மெதுவாக” நடக்கவேண்டும். வேகமாக நடப்பதால் மூச்சுப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

4. பல ஹஜ் குழுக்கள் மக்காவை ஹஜ்ஜிற்குப் பல நாட்களுக்கு முன்பே சென்றடைந்து விடுகின்றன. ஆர்வ மிகுதியால் ஹாஜிகள் தினமும் அதிகமதிகம் தவாஃப் செய்கின்றனர். உம்ராவும் செய்கின்றனர். தவாஃப் செய்வது முக்கியமானதுதான்! எனினும் ஹஜ்ஜுக்குரிய முக்கியமான ஐந்து நாட்களில் (துல்ஹஜ் 8 முதல் 13 வரை) செய்யப்பட வேண்டிய கிரியைகளுக்கு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம். ஆனால் ஹாஜிகள் பலர் இந்நாட்களில் சோர்வு அடைந்து விடுகின்றனர். இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

5. ஆண்களைப் பொறுத்தவரை “இஹ்ராம்” உடையில் நடப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே உள்ளாடை எதுவும் அணியாமல் வேட்டி மட்டுமே அணிந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது உதவியாக இருக்கும்.

6. பெண்களில் சிலர் மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்காக சில ஹார்மோன் மருந்துகளை ஒரு மாதகாலம் சாப்பிடுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். அதிகபட்சம் 5 நாட்கள் இம்மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். அதுவும் பெண் மருத்துவரின் ஆலோசனையின்படி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தவிர இம்மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு.
நோயாளிகளும் ஹஜ்ஜும்:

* ஹாஜிகள் பலர் உயர் ரத்த அழுத்தம் (BP) நீரழிவு முதலான நோயுள்ளவர்கள். இவர்கள் தங்களுடைய மருந்துகளை முறையாக உட்கொள்வதோடு மட்டுமன்றி உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்பவர்களுக்கு உணவைத் தாங்களே தயாரிப்பதால் உப்பு, சர்க்கரை, விஷயத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் தனியார் குழுக்களில் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இன்று பல தனியார் குழுக்கள் “சிறப்பு உணவினை” இது போன்ற நோயாளிகளுக்குத் தயாரிக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஹாஜிகள் உணவு விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.

* சிறுநீர் தொந்தரவுள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஹரமில் கழிப்பறைக்குச் சென்று வரவேண்டுமெனில் அது மிகச் சிரமமானதாகும். எனவே ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் அவர்கள் தங்களுடைய அறைகளிலே சிறிநீர் கழித்து ஒளு செய்துவிட்டு பள்ளிக்கு வருவது சிறந்ததாகும்.

* முக்கியமான ஒரு நோய் என்னவெனில் “சளி தொந்தரவு”. சுமார் 35 லட்சம் மக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் ”சளி தொந்தரவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஹஜ் காலங்களில் (குறிப்பாக ஹஜ்ஜிற்குப் பிந்தைய காலங்களில்) பள்ளிவாயில்களில் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். அதாவது ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நுரையீரல் சளி நோய். இதற்கு மருந்துகள் பல இருப்பினும் மிகச் சிறந்த மருந்து “முன்னெச்சரிக்கை” தான். முகத்தில் “முகமூடி” அணிந்து கொள்வது இந்நோய் வராமல் பாதுகாக்கும். குறிப்பாக ஏ.சி. அறைகளிலும், ஏ.சி. பள்ளிவாயில்களிலும் இது மிக மிக வேகமாகப் பரவும். எனவே ஹாஜிகளில் எவருக்கேனும் இருமல், சளி இருந்தால் உடனடியாக மருந்து சாப்பிடுவது மட்டுமன்றி அவர்கள் தங்கியுள்ள அறைகளில் ஏ.சி.யை அணைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து வைப்பது அவசியம்.

பல்வேறு விதமான நுரையீரல் சளி நோய்கள் இன்று உலகெங்கும் பரவி வருகின்றன. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்களால் ஹாஜிகள் யாரும் பயப்படவேண்டாம். முகமூடி அணியுங்கள். அல்லாஹ் போதுமானவன்!

7. இறுதியாக, இந்தியாவிலிருந்து வரும் ஹாஜிகளுக்காக (அரசு மூலமும், தனியார் குழுக்கள் மூலமும்) மருத்துவக் குழு மக்காவிலும், மதீனாவிலும் செயல்படும். நீங்கள் தங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ மையமும், மருத்துவமனையும் அமைந்திருக்கும். இந்திய மருத்துவர்களால் நடத்தப்படுவதால் மொழிப் பிரச்சினையும் இல்லை. எனவே கவலைப்படாமல் இம்மையங்களை அணுகுங்கள்! தனியார் குழுக்களில் பல மருத்துவர்களை அழைத்து வருவதால் பிரச்சினை இல்லை. இதைத் தவிர சவூதி அரசினால் நடத்தப்படும் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைகளை அளிக்கின்றன. எனவே ஹாஜிகள் கவலைப்படத் தேவையில்லை.

ஆக, ஹஜ்ஜிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே! உங்களுடைய ஹஜ் ஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொள்ளவேண்டும்.

உங்கள் பயணத்தில் நீங்கள் சில முக்கிய மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்:

1. வலி நிவாரணக் களிம்புகள் (Ointment)

2. முகமூடிகள் (Face Masks)

3. சாதாரண காய்ச்சலுக்குண்டான மாத்திரைகள்

4. நீங்கள் ரத்த அழுத்தம் அல்லது நீரழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவரானால் அவற்றுக்குரிய மருந்துகளை உங்கள் பயண காலத்திற்குக் கணக்கிட்டு மொத்தமாக வாங்கி எடுத்துச் செல்லுங்கள்.

5. இருமல் சளிக்கான மருந்துகளை (Sirup) பிளாஸ்டிக் குப்பிகளில் எடுத்துச் செல்லுங்கள்.

6. தூக்க மாத்திரைகளும், வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தும் சில மாத்திரைகளும் சவூதி அரசில் தடை செய்யப்பட்டவையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7. கொஞ்சம் பஞ்சினை மருந்துடன் வைத்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் காதுகளை அடைத்துக் கொள்ள உதவும்.

8. கைத் தொலைபேசி (Cell Phone) – வழி தவறிவிட்டால் உதவியாக இருக்கும். SIM Cardஐ ஜித்தா அல்லது மக்காவில் வாங்கி கொள்ளலாம். தயவுசெய்து திரைப்பட பாடல்களை RingTone வைத்து இருந்தால் மாற்றிக்கொள்ளவும். ஒவ்வொரு முறையும் ஹரத்தில் நுழையும் முன்பு ஞாபகத்துடன் Ring Tone ஐ Silent Mode அல்லது Vibratator Modeக்கு மாற்றிகொள்ளவும்.

9. Sweater, Sox, Monkey Cap, Ear Cap போன்றவை குளிரை சமாளிக்க உதவும்.

10. Scissiors, Nail Cutter, Shaving set – இஹ்ராம் கட்டுவதற்க்கு முன் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை, நகங்களை நீக்க.



குறிப்புகள்!

1. ஹரத்தில் உள்ளே எல்லா இடங்களிலும் ஸம்ஸம் தண்ணீர் கேன்கள் இருக்கும். சில கேன்கள் குளிரூட்டப்பட்டதாகவும் மற்றும் குளிரூட்டப்படாததாகவும் (NOT COLD) என்று எழுதி) இருக்கும்.

2. ஹரத்தில் நிறைய வாயில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாயிலுக்கும் வாயில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம் என்று ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். வழி தவறிவிட்டால் உதவியாக இருக்கும். ஹரத்திற்க்கு உள்ளே இருந்து வெளியே செல்வதற்கு வாயில்களின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


3. ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்க்கு பஸ்ஸில் அல்லது டாக்ஸியில் செல்வதாக இருந்தால் மலம் ஜலம் கழித்து ஒழு செய்துவிட்டு செல்வது நல்லது. கூட்டம் மற்றும் டிராபிக் அதிகமாக இருப்பதால், சில நேரங்களில் ஒரு மணிநேரம் அல்லது அதற்கு அதிகாம வாகனத்திலேயே இருக்கும்படி நேரலாம்.

4. அதிக தூரம் நடக்கவேண்டிய சூழ்நிலைகள் வரும். குளுகோஸ் (e.g. Glucon-D) எடுத்து சென்றால் அதிகம் நடக்கவேண்டிய நேரங்களில் சோர்வு ஏற்படும்போது உதவியாக இருக்கும்.

5. பணம், டிக்கெட், மருந்துகள் ஆகியவற்றை கையில் கொண்டு போகும் பெட்டியில் வைக்கவும். ஏனென்றால் லக்கேஜூகள் வெவ்வேறு வண்டிகளில் ஏற்றப்படுவதால் நம்முடைய அவசர தேவைக்கு அவை கிடைக்காமல் தாமதம் ஏற்படும்.

6. வங்கிகளில் கொடுக்கபடும் Debit Card வைத்து இருப்பவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள ATM மூலம் சவுதி ரியால் பணம் எடுத்து கொள்ளலாம்.

7. சாலைகளின் போக்குவரத்து முற்றிலும் வித்தியாசமானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது சாலையை கடக்கும் போது இடதுபக்கத்திலிருந்து வாகனங்கள் வருகின்றனவா என்பதை கவனித்து செல்லவேண்டும். இந்தியாவில் நாம் வலதுபக்கத்தை கவனிக்கின்றோம்.

8. உங்களுடைய பொருள்களை அடையாளமிட்டு கொள்ளுங்கள்.

9. உங்களுடன் தங்குபவர்களிடம் உங்களுடைய தீராத நோய்களை (எ.கா. இனிப்பு வியாதி Diabetes) பற்றி விபரங்கள் சொல்லி கொள்ளுங்கள். ஆபத்தில் உதவியாக இருக்கும்.

10. மினாவில் அனைத்து கூடாரங்களும் ஒரே வடிவத்தில் இருப்பதால் ஹாஜிகள் தங்கள் கூடாரங்களிலிருந்து வழி தவறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மினாவில் ஒவ்வொரு பகுதியிலும் கூடாரங்களில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். எனவே ஹாஜிகள் ஒவ்வொருவரும் தங்கள் கூடாரங்களின் எண்ணையும் அந்த பகுதியின் எண்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.

11. ஒளு முறிந்தால் கூட்ட நெரிசலில் திரும்பவும் ஒளு செய்ய போக முடியாது 


12. ஹரத்தில் கிட்டதட்ட ஒவ்வொரு வக்து தொழுகைக்குபின்னும் ஜனாஸா தொழுகை நடக்கும். ஆகையால் ஜனாஸா தொழுகை எப்படி தொழுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நோயுள்ளவர்கள் தங்களுடைய மருத்துவச் சீட்டினை அவசியம் எடுத்துச் செல்லவேண்டும். ஜம் ஜம் தண்ணீரை அதிகம் பருகுங்கள். அது நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.

எனவே ஹாஜிகளே! உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கியமாக நிறைவேற்றுங்கள். சுறுசுறுப்பாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுங்கள்! உங்களுடைய ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இறைவன் ஆக்கியருள் புரிவானாக!ஆமீன்
நன்றி : Dr. ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதர் MBBS, MS.(இந்திய மருத்துவக் குழுவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட மருத்துவர்)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...