Wednesday, January 18, 2017

Muharram Month Ashura Fasting Virtues in Tamil

முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷுரா நோன்பின் சிறப்பு

Muharram Month Ashura Fasting Virtues in Tamil

Muharram Month and Ashura Fasting Virtues in Tamil
"வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை" என அல்குர்ஆன்(9:36) கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய 4 மாதங்களாகும்.


ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
நூல்: புகாரி(2006)

"நோன்புகளில் ரமலானுக்குப் பின் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம், அஹ்மத்

ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அறியாமைக்கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம் எனக் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் (1901)

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரி(1592)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலைஹி ஸலாம்) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலைஹி ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்" என்று யூதர்கள் கூறினர். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரி(3397)

பாவங்களுக்கு பரிகாரம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
"முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா)நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்."  அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்லிம்(1976)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள். அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு)  நூல்: முஸ்லிம் (1977)

யூதர்களுக்கு மாறு செய்தல்
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே? என்று வினவினர். அதற்கு நபி ﷺ , இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் மரணித்து விட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில், 
அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது. அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)  நூல்: முஸ்லிம் (1916, 1917)

Muharram Month Ashura Fasting Virtues in Tamil

Muharram Month & Ashura Fasting Virtues in Tamil

Source: https://www.acmyc.com/reader/87/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...